Kushboo Interview from India Today - Sex Survey Issue
குஷ்பு - பீர் முகமதுவிடம் கூறியபடி
நன்றி - இந்தியா டுடே
பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை பெங்களூரை விட பின் தங்கியே இருந்தது. இப்போது சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. செக்ஸ் பற்றி பெண்களால் வெளிப்படையாகப் பேச முடிகிறது. கட்டுப்பெட்டித்தனம் நிறைந்த இந்திய சமூகத்தில் பெண் இந்த விஷயத்தில் மெல்ல சிறகடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் ஸ்டெஃபானி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் இந்தப் போக்கு ஆரோக்கியமானதுதானா என்கிற கேள்வியை எழுப்புகிறது. அதே சமயம் பள்ளிக்கூடங்களில் செக்ஸ் கல்வியும் மிகவும் அவசியம். பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரவில்லை என்றாலும் கூட பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படைகளைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல; அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய்ஃப்ரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெண் தனது பாய்ஃப்ரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். தனது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்.
நான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் பிறந்ததால் எங்களுடைய பொறுப்புகள் அதிகமாகியிருக்கின்றன. குழந்தைகளும் எங்களுடனே தூங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் எங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிறது. மண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாக்வும் சந்தோஷமளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் முழுமையாக திருப்தியடையச் செய்வதுதான் ஆனந்தம். இருவரும் தங்கள் செக்ஸ் ஆசைகளை பரஸ்பரம் புரிந்துகொண்டால் மணவாழ்வில் பிரச்னை இருக்காது.
சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தாம்பத்திய இன்பத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். அதை தவறு என்று சொல்லமுடியாது. அதே சமயம் இருவருமே ஒருவர் மற்றவரது விருப்பு வெறுப்புகளையும் சௌகரிய அசௌகரியங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் தமது செக்ஸ் விருப்பங்களைப் பற்றி பேசினால் அவர்களை தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். ச்க்ஸிற்கு இரு நபர்களுடைய இணக்கம் அவசியம்.
(இது செப். 28, 2005 இந்தியா டுடேயில் வெளியான முழுப் பதிவு.)
posted by Boston Bala @ 10:53 PM